மணிகர்ணிகா படித்துறை
மணிகர்ணிகா கட்டம் முக்கிய படித்துறை. ஆதிசங்கரர் எழுதிய மணிகர்னிகாஷ்டகத்தில் மணிகர்ணிகா கட்டம் பற்றி மிகச் சிறப்பாக கூறியுள்ளார்.ஆகையால் இங்கு சிறுதானங்கள் செய்வது மேன்மையை தரும். அவற்றின் பலன் பல மடங்கு உயரும் என்றும் கூறுவார்கள். ஆகையால் ஏராளமான யாத்திரியர்கள் இங்கே அன்னதானம் முதல் கோதானம் வரையில் செய்வதுண்டு. கங்கையில் நீராடி காரியங்களை செய்பவர்கள் பிறர்மீது படாமல் மடியாக இருப்பதில்லை. யார் மீது யாரும் படலாம். படகோட்டி, பசுமாட்டை அழைத்து வருபவர், பண்டா யார் பட்டாலும், புனிதம் குறைவதில்லை. அனைவரும் ஒன்றே என்ற தத்துவத்தை இங்கே நிதர்சனமாக காண்கின்றோம். காசியில் இக்காரியங்களை செய்ய வருபவர்களுக்கு உதவ பல தென்னிந்திய புரோகிதர்கள் உள்ளனர். சங்கரமடம், குமரகுருபரர் மடம், திருப்பனந்தாள் மடம் போன்றவை உள்ளன. எந்தவொரு உயிரினமும் தன்னுடைய சரீரத்தை இங்கு தியாகம் செய்தால் மோட்சம் அடைந்து சிவலோகம் செல்வதாக ஐதீகம். ஆகையால் ஏராளமான மக்கள் காசியிலே இறந்துவிட தங்கள் கடைசி காலத்தை இங்கேயே கழிக்கின்றனர்.
இப்படித்துறையில் ராமகிருஷ்ணபரமஹம்சர் ஒரு தெய்வீகக் காட்சியைக் கண்டார். "" மணிகர்ணிகா கரையில் பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. வெண்ணிற ஜடாமுடியுடன் அங்கு வந்த சிவபெருமான் தாரகமந்திரத்தை இறந்தவர்களின் காதில் ஓதினார். மறுபுறம் கருணையுடன் ஜகன்மாதாவும் உயிர்களைப் பிணித்திருக்கும் தளைகளை நீக்கி அருளினாள். பாக்கியம் பெற்ற அவ்வுயிர்கள் மோட்சகதியை அடைந்தன,'' என்று தன் அனுபவத்தைக் கூறினார்.

உடல்களை எரிப்பதனால் ஏற்பட்ட புகையால், புகைபடிந்துள்ள கட்டிடம் |
கோவிலின் முன் உள்ள இந்த இடத்தில் இருக்கும் அக்னியை கொண்டே இங்கு எடுத்துவரப்படும் அனைத்து உடல்களும் தீ மூட்ட படுகின்றது. |
இங்கு தீ விழுங்கிக்கொண்டிருக்கும் உடலின் நிலமைதான் இந்த உடலுக்குமா ?
ஆனால் இந்த உடலுக்காகத்தானே வாழ்க்கையின் அதிக காலத்தை செலவழிகிறோம்,இந்த உடலை நான் என்று நினைத்ததால் தானே போட்டி , பொறாமை ,பேராசை ,கோபம் ,காமம் போன்ற குணங்கள் தோன்றியது.இந்த குணங்களால் தானே வாழ்க்கையில் அனைத்து நிம்மதியும் இழந்து தவிக்கிறோம் என்ற எண்ணத்தில் பார்த்துக்கொண்டு உள்ளாரோ ?
இந்த உடலுக்குள் என்ன இருந்தது அன்று என்ன இல்லை இன்று.
நாம் நம் வாழ்க்கையில் அன்று இருந்த அந்த ஒன்றிற்கு முக்கியத்துவம்
கொடுக்கின்றோமா ?
அல்லது சாம்பலாகும் இந்த உடலிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமா ?
சிவவாக்கியர் பாடல்
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காணவல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.
திருமூலரால் எழுதப்பட்ட பாடலின் ஒரு சிறு பகுதி
திருமந்திரம்
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.
உடம்பினை வளர்தேன் உயிர் வளர்த்தேனே !!!!!
கடுவெளி சித்தர் பாட்டு
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"
விளக்கம் : மனித உயிர் ( ஜீவன் ) ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப்பட்டு இருக்கிறது.இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டுகிறான். ஜீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நாலாறு மாதமாய் (4+6=10) மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான். ஜீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன்(இறைவன்) செய்து கொடுத்தான்.தோண்டி(உடல்) கிடைத்தவுடன் ஆண்டி கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டுடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. தோண்டியை(உடல்) தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.(மனிதன்).
அதுபோல் அல்லாமல் நல்ல வழியை தேட வேண்டும் என்றும், எந்நாளும் கடவுளின் அருளை தேட வேண்டும் என்றும் வெளிப்படுத்துகிறார் கடுவெளிச் சித்தர்.